போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஷாட் பிலிம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பாராட்டு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் மற்றும் ரீல்ஸ் தொடர்பாக காவல்துறை நடத்திய போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

“போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதற்காக தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு அமலாக்கம், குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் ஏடிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விழிப்புணர்வை மையமாகக் கொண்ட குறும்படங்கள் மற்றும் ரீல்கள் தயாரிப்புப் போட்டியை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல்துறை நடத்தியது. இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 115 குறும்படங்கள், ரீல்களை சமர்ப்பித்தனர்.

முதல் இடத்தைப் பிடித்த சென்னை, திருவேற்காடு ஆர்எம் பள்ளியைச் சேர்ந்த ஜி. உஷா மற்றும் அவரது குழுவினருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. 2ம் பரிசை வென்ற நாமக்கல் பிஜிபி கல்லூரி மாணவி சிந்து லக்காரிக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கமும், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் விக்னேஷ் என்பவருக்கு 3ம் பரிசுக்கான ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள 22 குழுக்களிலும் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழுக்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
அமலாக்கப்பணியக போலீஸ் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புலனாய்வு குற்றப்பிரிவு ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, மொத்தம் 9,736 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14,365 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 21,072.11 கிலோ கஞ்சா, 222..731 கிலோ பிற போதைப் பொருட்கள், மற்றும் 1,96,931 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 23.29 கோடி.
மேலும் இந்த ஆண்டில், ரூ.55.61 கோடி மதிப்புள்ள 55,612 கிலோ மயக்க மருந்துகள் மற்றும் மன அழுத்தம் உண்டாக்கும் பொருட்கள், அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 93.20 லட்சத்திற்க்கு NDPS சட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 178 வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக அமலாக்கப்பணியக காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் அல்லது விற்பனை தொடர்பான தகவல்களை (24×7) தெரிவிக்க:
கட்டணமில்லா உதவி எண்: 10581 💬 வாட்ஸ்அப் எண்: 94984 10581