தமிழக காவல்துறை பயிற்சி இயக்குநரகத்தின் டிஜிபியும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் பிஎச்டி படிப்பில் தேர்ச்சி பெற்று டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
சந்தீப்ராய் ரத்தோர் 1992ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் கால் பதித்தவர். தற்போது தமிழ்நாடு காவல்துறையின் பயிற்சி இயக்குநரகத்தில் காவல் துறை இயக்குநராகவும், தமிழ்நாடு காவல்துறை உயற்பயிற்சியகத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். சந்தீப்ராய் ரத்தோர் தன் பணிக்காலம் முழுவதும் தனது நேர்மை குணத்தாலும் அயராத முயற்சியாலும் ஒப்பற்ற மற்றும் தேர்ந்த பணி நெறிமுறைகளை மேற்கொண்டு, களங்கமற்ற சேவையை தேசத்திற்கும் மக்கள் நல மேம்பாட்டுக்கும் பாதுகாப்பிற்கும் அர்ப்பணித்த பெருமை இவரைச் சாரும்.
ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கிய பெருமை
கடந்த 2021ம் ஆண்டு நீண்ட நெடிய காவல் சரகங்களை கொண்ட சென்னை பெருநகர காவல்துறை ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆவடி காவல் ஆணையரகத்தை உருவாக்கும் பொறுப்பு சந்தீப்ராய் ரத்தோர் வசம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார். அதன்படி சந்தீப்ராய் ரத்தோரின் கடின உழைப்பால் சென்னைக்கு இணையான பலம் மிக்க ஆணையரகமாக ஆவடி காவல் ஆணையரகம் உருவாகி நிற்கிறது.
அடுத்தடுத்து முதுகலைப் பட்டங்கள்
புவியியலில் இளங்கலை பட்டம் பெற்ற (B.A. Geography) சந்தீப்ரரய் ரத்தோர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த போது மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ கிரிமினாலஜி மற்றும் காவல் அறிவியல் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) காவல் தலைவராக பணிபுரிந்தபோது, மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பினை மேற்கொண்டு எம்பில் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷனிலும், அண்ணாமாலை பல்கலைக்கழகத்தில் M.A. Disaster Managemen படிப்பிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
விஐடி பல்கலையில் பிஎச்டி டாக்டர் பட்டம்
இது மட்டுமின்றி தற்போது, வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் “இந்தியாவில் பேரிடரின் விளைவுகளை மதிப்பிடுதல் மற்றும் பலப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து (Ph.D. Disaster Mitigation and Management) முனைவர் பட்டம் பெற்று கல்வி மேலாண்மையில் தனி முத்திரைப் பதித்துள்ளார் சந்தீப்ராய் ரத்தோர். அவரது இந்த ஆராய்ச்சியானது, பேரிடரின் போது இந்திய பேரிடர் மீட்பு பணிகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் வகுத்தளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை, பேரிடர் மீட்புப் பணிகளின் பெரும்பங்கு
பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளானது காவல்துறையில் கீழ்க்காணும் வகைகளில் பெரும்பங்கு வகிக்கிறது:
அவசர மற்றும் பேரிடர் கால சவால்களை துரிதமாகவும் திறம்படவும் அணுகுதல். உயிர்களை காத்து, உயிரிழப்புகளை குறைத்தல். குற்றங்களைத் தடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்தல். பேரிடர் காலங்களில் ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல். காவல்துறையின் மீதான நம்பிக்கையை சமுதாயத்தில் உருவாக்குதல் ஆகியவை பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப்பணிகளின் பெரும் பங்கு ஆகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வீரா வாகனம்
ஆவடி காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் பணியாற்றியபோது இந்திய அளவில் யாரும் முன்னெடுத்திராத, புது முயற்சியாக, சாலை விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள் ஆகியோரை இலாவகமாக மீட்டெடுக்க “வீரா” என்னும் புது வகை வாகனத்தை வடிவமைத்து செயல்படுத்தினார். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இத்தகைய சிறப்பு வாய்ந்த உயிர் காக்கும் வாகனம் முதல் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்தீப்பின் முயற்சியை மக்களுக்கு அர்ப்பணித்த முதல்வர்
மோசமான சாலை விபத்துகளைக் கையாளும்போது, சிதைந்த வாகனங்களில் சிக்கியிருப்போரை மீட்பதில், பேரிடர் மீட்புப்பணி காவலர்கள் வரும் வரை காத்திருக்கும் நிலையை “வீரா” வாகனம் முறியடித்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் பணியாற்றியபோது, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் 08.09.2023 அன்று வீரா வாகனத்தை பொதுமக்கள் சேவைக்கு அர்ப்பணித்தார். விபத்துக்குள்ளாகி சிதைந்த வாகனத்திலிருந்து சிக்கியிருக்கும் விலைமதிப்பில்லா உயிர்களை தக்க நேரத்தில் காக்கும் நோக்கில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
12 காவல் மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புக்குழு
சந்தீப்ராய் ரத்தோர் சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியாற்றிய காலத்தில் மேலும் ஒரு முன்னோடி திட்டமாக மாவட்ட அளவிலான பேரிடர் மீட்புக் குழுக்களை (DDRT- District Disaster Response Team) தொடங்கி தொடங்கி வெற்றி கண்ட பெருமையும் இவரையே சாரும். இத்திட்டமும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் முன்னெடுக்கப்பட்டது. இதுவரை தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF-National Disaster Response Force) மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு (SDRF-State Disaster Response Force) மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மாவட்ட அளவில் பேரிடர் மீட்புக் குழுக்களை தொடங்கி, அதனை சென்னையின் 12 மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
மிக்ஜாம் புயலின் போது உச்சம் தொட்ட மீட்புப் பணி
2023-ல் ஏற்பட்ட “மிக்ஜாம்” புயலின் போது 8,264 நபர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டனர். மேலும் சென்னையில் புயல், வெள்ளத்தின் போது சேதமடைந்த 2,807 மரங்கள் மற்றும் 954 வாகனங்கள் துரிதமாக அப்புறப்படுத்தப்பட்டன.
பேரிடர் மீட்பில் பதக்கங்களை குவித்த சந்தீப் ராய் ரத்தோர்
முனைவர் சந்தீப் ராய் ரத்தோர் தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் மூன்று ஆண்டுகள் காவல் துறை தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது அவரது சிறந்த பங்களிப்புக்காக ஐந்து முறை DG NDRF & CD Disc வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் 2015-ம் ஆண்டுக்கான NDRF பதக்கமும் சந்தீப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை நவீனமயமாக்குதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அவரது சிறந்த முன்னெடுப்புகளும் சாதனைகளும் அவரது புகழை பறைசாற்றும். “வீரா” பேரிடர் மீட்பு வாகனம் மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் மீட்புக் குழுக்கள் ஆகிய இரண்டு உயிர் காக்கும் திட்டங்களும் தமிழ்நாடு காவல்துறைக்கான அவரது தலைசிறந்த பங்களிப்பாகும். இவ்விரண்டு சிறந்த திட்டங்களும் பேரிடர் மீட்புக் குழுவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.
இரண்டு முறை ஜனாதிபதி பதக்கம்
முனைவர் சந்தீப் ராய் ரத்தோர் காவல்துறையின் மீது கொண்டுள்ள மிகச்சிறந்த ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக அவருக்கு 2008ம் ஆண்டுக்கான, “குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கம்” மற்றும் 2015ம் ஆண்டுக்கான “குடியரசு தலைவரின் தகைசால் பதக்கம்” வழங்கி கவுரவிக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
40 ஆவது பட்டமளிப்பு விழாவில் சந்தீப்ராய் ரத்தோருக்கு டாக்டர் பட்டம்
தற்போது சந்தீப்ராய் ரத்தோர் வேலூர் விஐடி பல்கலைக்கழக்கத்தில் “இந்தியாவில் பேரிடரின் விளைவுகளை மதிப்பிடுதல் மற்றும் பலப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். விஐடி பல்கலையில் நடந்த 40 ஆவது பட்டமளிப்பு விழாவில் சந்தீப்ராய் ரத்தோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.