9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சென்னை, கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 48 வயது குற்றவாளி மற்றும் 2 பெண்களை போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்தும் வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 48 வயது குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 85 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், 28 வயது பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.