மணிப்பூரில் கலவரக்காரர்கள் 2 பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற போது அதனை காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அவர்கள் தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. கடந்த 2 மாதங்களாக அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறை நடைபெற்ற இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அங்கு கலவரம் ஓய்ந்த பாடில்லை. கலவரத்தால் அங்கு பெருமளவில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கின்றன. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் ஊர்வலமாக இழுத்துச் சென்று அவமானப்படுத்திய வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இரண்டு பெண்களில் ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் . மேலும் இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் உதவ முயன்ற போது, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அவரின் தந்தையும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், இக்கொடூர செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருவதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் இச்சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு தாமதமாக வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ‘தி வயர்’ இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ள அந்த பெண், ”மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் ஊருக்குள் புகுந்திருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் கூறினர். இதனால் நாங்கள் (குகி பழங்குடி மக்கள்) கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தோம். தாக்குதல் நடத்தியவர்கள் எதையும் யோசிக்கவில்லை. அவர்கள் எங்களை ஒரு புதர் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மூன்று பேர் என்னைப் பிடித்துக் கொண்டனர். அதில் ஒருவன் என்னை துன்புறுத்த மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்தான். அவர்களில் சிலர் எங்கள் ஆடைகளை கழற்றச் சொன்னார்கள். மெய்தே சமூகத்தினரில் சிலர்கூட எங்களைக் காப்பாற்ற முயன்றனர். இவை அனைத்தையும் மணிப்பூர் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை” என்று அவர் கூறினார்.