சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்து 60 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 1.08 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி (வயது 81). கடந்த 21.04.2023ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார் 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிவகாமி சுந்தரியின் மகன் கொடுத்த புகாரின்பேரில், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணைக்கமிஷனர் சிபி சக்கரவர்த்தி மேற்பார்வையில் பரங்கிமலை துணைக்கமிஷனர் தீபக்சிவாச் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் பிராங்க் டி ரூபன் (மடிப்பாக்கம்), பாரதிராஜன் (தி.நகர்) தலைமையில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர புலன் விசாரணை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை கேகே நகரைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவரை 24.04.2023 கைது செய்தனர். விசாரணையில் கொலையாளி சக்திவேல், Fabric Work செய்து வந்த இவர் சரியான வேலை இல்லாமல் கடனாளியாகி விட்டதால் குடும்பம் நடத்த பணம் இன்றி கஷ்டப்பட்டுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை குறிவைத்து திருட திட்டம் போட்டுள்ளார். இதனால் கடந்த 21.04.2023 அன்று பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், 12வது தெருவில் கண்காணித்தபோது, மூதாட்டி சிவகாமி சுந்தரி வீட்டில் தனியாக இருந்ததை கவனித்துள்ளார். அவரது வீட்டிற்குள் நுழைந்து, சிவகாமி சுந்தரியை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த தங்கநகை, பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணையில் எதிரி சக்திவேல், இதே போல, கடந்த 2021ம் வருடம், அவரது வீட்டினருகில் கே.கே.நகர், பாரதிதாசன் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி சீதாலட்சுமி 70 என்ற மூதாட்டியையும் கொலை செய்து, 19 சவரன் தங்க நகைகள் திருடியது தெரியவந்தது. அதன்பேரில், சக்திவேலிடமிருந்து மொத்தம் 60 சவரன் நகைகள் மற்றும் ரூ.1,08,000/- ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட எதிரி சக்திவேல், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளியை கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த துணை கமிஷனர் தீபக் சிவாச், உதவி ஆணையாளர்கள் பிராங்க் டி ரூபன் (மடிப்பாக்கம்), திரு.பாரதிராஜன் (தி.நகர்), 7 காவல் ஆய்வாளர்கள், 7 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.