8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர்: நீதிமன்ற பிடியாணையின் கீழ் கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
மத்தியக் குற்றப் பிரிவு, போலி விசா வழக்கில், 8 வருடங்களாக தலைமறைவாக இருந்த, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நிலுவை வழக்குகளுக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதன்படி குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், வழக்கின் எதிரிகளுக்கு உரிய நீதிமன்ற தண்டனை பெற்று தந்திட உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவு எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு, முகமது இம்தியாஸ் என்பவர் ITI படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முயன்றார். அப்போது போது, திருமுல்லைவாயிலில் வசிக்கும் பாஸ்டர் வில்லியம் ஜோசப் என்பவரை சந்தித்துள்ளார். அவர் தனது நண்பர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல விசா ஏற்பாடு செய்து தருவதாக கூறி, இம்தியாஸ் உட்பட 29 நபர்களிடமிருந்து ரூபாய் 18 லட்சம் பெற்றுக்கொண்டு போலியான விசா கொடுத்து ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவில் 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய 10 எதிரிகள் மீது புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கையை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரி சுந்தர் நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்த காரணத்தால் கடந்த 20.09.2017 அன்று, எதிரி சுந்தர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கமிஷனர் அருண் ள் உத்தரவின்பேரில் மேற்படி தலைமறைவு எதிரி சுந்தர் என்பவரை காவல்குழுவினர் தேடி வந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு குன்னூர், நீலகிரி மாவட்டம் ரஸ்லிங் ரிவர் ரிசார்ட், கிளிஞ்சாடா கிராமம் என்ற முகவரியில் சுந்தர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டது.