சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநரான டிஜிபி சந்தீப்ராய் ரத்தோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநரான சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1992ம் ஆண்டு ஐபிஎஸ் தமிழக கேடர் அதிகாரியான சந்தீப்ராய் ரத்தோர் டில்லியைச் சேர்ந்தவர். நாகர்கோவில், பரமக்குடி ஏஎஸ்பியாக தனது ஐபிஎஸ் காவல் பணியைத் துவங்கினார். பிறகு தூத்துக்குடி எஸ்பி, கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனர் மற்றும் சென்னை நகர போக்குவரத்து துணைக்கமிஷனர், சிபிஐடிஐ டிஐஜி, திருச்சி, மதுரை சரக டிஐஜி, சென்னை நகர போக்குவரத்து போலீஸ், மத்திய சென்னை மற்றும் தலைமையிட இணைக்கமிஷனர், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். டில்லி திகார் சிறை, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவராகவும் சந்தீப்ராய் ரத்தோர் பணிபுரிந்தவர். கோவையில் 1998ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டார். சென்னை 2ஆகப் பிரிக்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்ட போது அதனை செம்மையாக உருவாக்கிய பெருமையும், ஆவடி காவல் ஆணையரக முதல் போலீஸ் கமிஷனர் என்ற பெருமையும் சந்தீப்ராய் ரத்தோரை சாரும்.
2001 – -2002 ம் ஆண்டுகளில் உலக அமைதிக்கான சிறப்புக் காவல் படையில் பங்கேற்று சிறந்த காவல் பணிக்கான பதக்கம் பெற்றார். 2003ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பியாக இருந்த போது, முத்திரைத் தாள் மோசடி வழக்கை விசாரித்தவர். 2005ம் ஆண்டு தூத்துக்குடி எஸ்பியாக பணிபுரிந்த போது மாவட்ட காவல்துறை முதன்முறையாக ஐஎஸ்ஒ தரச்சான்றிதழ் பெற்றது. 2010 ம் ஆண்டில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியாகவும், 2016- – 2017 ம் ஆண்டில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும ஐஜியாகவும் சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றியவர். சிறந்த காவல் பணிக்காக சந்தீப்ராய் ரத்தோர் 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் ஜனாதிபதி விருதுகளை பெற்றவர். சென்னை நகரின் 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நாளை பதவியேற்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.