அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

139

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த 9 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் சட்ட விதியாகும். இதை தொடர்ந்து பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் (26-.02.2023) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாளை (19.02.2023) மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரிகள் இருவரும் அவரது வேட்பு மனுவை பெற்றுக்கொண்டனர். இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்துகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.