சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்: சென்னை போக்குவரத்துப் போலீஸ் நடவடிக்கை

124

சென்னையில் போக்குவரத்து விதியை மீறிச் சென்ற நடிகர் விஜய் கார் மீது ரூ. 500 அபராதம் விதித்து சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அவர் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த மாதம் அவர் தமிழகம் முழுவதும் உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசுகள், நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நீலாங்கரையில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இது விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் லியோ சூட்டிங் முடிவடைந்த நிலையில் விஜய் அடுத்த கட்டமாக சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று மதியம் தனது காரில் சென்றார். அப்போது அக்கரை, கிழக்கு கடற்கரைச்சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தும் அதனை மதிக்காமல் விஜய்யின் கார் சென்றது. அந்த சிக்னலில் இருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவானது. இது தொடர்பாக நீலாங்கரை போக்குவரத்துப்பிரிவு காவல்துறையினர் நடிகர் விஜய்யை போக்குவரத்து காவல் விதியை மீறியதற்காக ரூ. 500 அபராதம் செலுத்தும்படி சல்லான் (நோட்டீசு) அனுப்பியுள்ளனர். நீலாங்கரை போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தரப்பில் இந்த அபராத நோட்டீசு நடிகர் விஜய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பனையூரில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் தகவல் ரசிகர்கள் மத்தியில் தெரிவவந்ததும் அவரது காரை பின்தொடர்ந்து முன்னும் பின்னுமாக ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் திரண்டு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் விஜய் அக்கரை டிராபிக் சிக்னலில் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. விஜய் போக்குவரத்து விதியை மீறும் காட்சிகள் இணையத்திலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.