பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் என்று கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:- இலக்கியம் என்பது ஒரு இனம் தன் அடையாளத்தையும் பண்பாட்டையும் மட்டுமல்ல வரலாற்றையும் தெரிந்து கொள்ள உதவுகின்றது. மனித வரலாற்றை கற்பனையான கதைகளின் மூலம் கட்டமைக்க முடியாது. ஆனால், தமிழ் இலக்கியம் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பை உறுதியூட்டுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினம் என்ற கடற்கரை நகரம் எப்படி இருந்தது என்பதையும் மதுரையின் வணிகச் சிறப்பையும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் நெறியையும் தெரிந்து கொள்ள உதவுகிறது. அது வெறும் கற்பனை அல்ல, என்பதையும் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக, தமிழர்களின் பாரம்பரியமும் தொன்மையும் கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பதை அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், கீழடி ஆகியவற்றில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகிறது.
பல மொழி பேசும், பல இன மக்கள் ஒன்றாக வாழும் நகரத்தை ‘காஸ்மோபாலிட்டன்’ நகரம் என்று இப்போது சொல்லுகிறோம். ஆனால், சங்க பாடல் “மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்திசைத் துறையும் முட்டாச்சிறப்பிற் பட்டினம்” என்று கூறுகிறது. அதாவது, பல மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டை விட்டு குடிபெயர்ந்து, ஒரே இடத்தில் வசிப்பது மட்டுமல்ல; ஒற்றுமையாக ஒன்றுகலந்து இனிதாக வாழும் ஊரே பட்டினம் என்று அடையாளம் காட்டுகிறது.
இதுதான் தமிழரின் அடையாளம். இந்த பன்முகத்தன்மை தான் இந்தியாவின் உண்மையான அடையாளம். அந்த ஒற்றுமை உணர்வை காப்பாற்ற வேண்டும்.
கல்வி தான் மனிதர்களுக்கு முன்னேற்றத்தையும் சுயமரியாதையையும் ஏற்படுத்துகிறது. அந்த காலத்தில் செருப்பு அணிந்து தெருவில் நடந்த மனிதரை கட்டி வைத்து அடித்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்று அவரது பேரன் அதே தெருவில் காலில் ‘பூட்ஸ்’ அணிந்து கொண்டு நடந்து போகிறான். என்றால் அதற்கு கல்விதான் காரணம். அதனால் தான் மகாகவி பாரதியார் வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்பதோடு நிற்காமல் பயிற்றுப் பல கல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திட வேண்டும் என்று பாடினார். உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த திருக்குறள் நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுகிறது.
ஒருவரிடம் இருந்து சிறிய உதவி பெற்றாலும் அந்த உதவியை எப்போதும் மனிதர்கள் மறக்கக்கூடாது. “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு”என்கிறார் திருவள்ளுவர். “நன்றி கெட்ட மனிதரை விட நாய்கள் மேலடா” என்ற பாடலை நாம் கேட்டிருக்கிறோம்.
அன்பு தான் மனித வாழ்வின் அடிப்படை ஆகும். பிற உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாத மனிதர்கள் வாழும் மனிதர்கள் அல்ல வெறும் எலும்புகள் போர்த்திய உடம்பை கொண்டவர்கள் என்று திருக்குறள் கூறுகிறது. இப்போது கோயில்களும் மசூதிகளும் தேவாலயங்களும் ஊருங்கும் திருவெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அன்பும் ஒற்றுமை உணர்வும் குறைந்து கொண்டிருக்கிறது.
எல்லா உயிர்களும் இறைவன் படைத்தது என்றும் எல்லா உயிர்களிலும் இறைவன் குடி இருக்கிறான் என்றும் பேசுவது உண்மை என்றால் கடவுளின் பெயரால் நடைபெறும் மனிதக் கொலைகளை என்னவென்று சொல்லுவது.
எனவே “அன்பே சிவம்”என்பதையும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்ன இயேசுவின் பொறுமையையும், ‘ஒரு மனிதரை வாழ வைத்தால் ஒரு சமூகத்தையே வாழ வைத்ததற்கு சமம்’ என்ற முகமது நபியின் போதனை யையும் பின்பற்றி அனைத்து மனிதர்களைம் ஒன்றுபட வேண்டும்.
எந்த முயற்சியும் செய்யாமல் முடங்கி இருக்கும் சோம்பேறிகளால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது. முடங்கிக் கிடந்து குகையில் வாழ்ந்த மனிதன் நடக்கத் தொடங்கிய பிறகுதான் நாகரீகம் பிறந்தது. தொடர்ந்து முயற்சி செய்யவும் உழைக்கவும் தயாராக இருக்கும் மனிதர்கள் மட்டுமே தாங்களும் உயர்ந்து பிறரையும் உயர்த்த வழிகாட்டுவார்கள்.
வருங்காலத்தில் நமது நாட்டை வழிநடத்த உள்ள மாணவர்களிடம் பிறர் மீது அன்பு செலுத்தும் பண்பையும், பிறருக்கு உதவி செய்யும் குணத்தையும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், இயற்கையை நேசிக்கும் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும். ஏமாற்றிப் பெரும் வெற்றியை விட தோல்வி மேலானது என்கிற உன்னத உணர்வையும், சமூகத்தின் அவலங்களை கண்டு கொதித்தெழும் துணிச்சலையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர் டி. ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ம. கெத்சி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்களின், ஒயிலாட்டம், பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் மார்க்கரெட் மாலதி வரவேற்புரை ஆற்றினார். முடிவில் மாணவ ஆசிரியை வி.ஜி.ரோஷன் நன்றி கூறினார்.