பள்ளிகளை உருவாக்கிய பெருமகன் காமராசர் – அ. முகமது ஜியாவுதீன், மேனாள் நீதிபதி

159

ஜூலை 15,

கர்ம வீரர், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய மனிதர். அரசியல் கடந்தும் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பெயர் காமராசர். தந்தை பெரியார் அவர்களால் கல்வி வள்ளல், பச்சைத் தமிழர் என்று பாராட்டப்பட்டவர். அவர் சார்ந்த கட்சியின் முதலமைச்சரால் நிதிநிலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை எல்லாம் தான் முதலமைச்சர் ஆனவுடன் மீண்டும் திறந்தவர், மேலும் பள்ளிகளை உருவாக்கிய பெருமகன்.ஆற்றுநீரில் அணைகள் கட்டி பாசன வளர்ச்சிக்கு பங்காற்றியவர்.

இப்படி வரிசைப்படுத்தினால் வளர்ந்து கொண்டே இருக்கும், நிலைத்த புகழுக்கு ஒரு நாள் சம்பவமே உதாரணம்… ஆம், காமராசர் முதல்வராக இருந்த போது ஒரு நாள் அவரை சந்திப்பதற்காக ஏற்கனவே முன் அனுமதி (Appointment) பெற்ற தொழிலதிபர்கள் மாலை நேரம் வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் காமராசரை சந்திக்க வெளியூரில் இருந்து பொதுமக்கள் வந்து விடுகிறார்கள். முதலமைச்சருக்கு இரண்டு தகவலும் வருகிறது. வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு என்று கேட்கிறார். 8.30 மணிக்கு என்றதும் முதலில் அவர்களைச் சந்திக்கிறார்.

அவர்களோடு பேசி முடித்து அனுப்பிவிட்டு, தனது உதவியாளரை அழைத்து ஏற்கனவே முன் அனுமதி பெற்ற முதலாளிகளை வரச் சொல்கிறார்.வந்த முதலாளிகளின் கண்களில் முன்அனுமதி பெற்று வந்திருந்தும் தங்களைக் காக்க வைத்துவிட்டு சாதாரண பொதுமக்களை சந்தித்த வருத்தம் தெரிகிறது. அதனை கவனித்த காமராசர் அவர்களையும் காயப்படுத்த விரும்பாமல் இப்படி சொல்கிறார்… பொதுமக்கள் சொந்த ஊர் போவதற்கு கடைசி பஸ் இரவு 8.30 மணிக்கு, அதை தவற விட்டால் காலை வரை பேருந்து நிலையத்திலோ ரோட்டோரமாகவோ தான் தூங்க வேண்டும், அதிலும் காலை உணவிற்கு காசு இருக்கிறதோ இல்லையோ அதனால் தான் முதலில் அவர்களைப் பார்த்து அனுப்பினேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் போகலாம் கார் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல அதற்குப் பிறகு சொன்ன வார்த்தை தான். ஆழமானது; அர்த்தம் மிகுந்தது.

“நீங்கள், நான் முதலமைச்சர் ஆனதால் பார்க்க வந்திருக்கிறீர்கள். அவர்கள், என்னை முதலமைச்சர் ஆக்கிவிட்டு பார்க்க வந்திருக்கிறார்கள்” உண்மையை உணர்ந்தவர். அதனால் தான் காலம் முழுவதும் நன்றியோடு தமிழகம் அவரை நினைவில் வைத்துப் போற்றுகிறது.மற்றவர்களை  மதிப்பதில் பொருளாதாரத்தைப் பின்னே வைத்து மனிதத்தை மனதில் வைத்த மாபெரும் மனிதர்கள் என்றென்றும் நம் இதயத்தில் வாழ்ந்திருப்பர்.

நல் வாய்ப்பும்
நலமான எண்ணமும்
நமக்கும் வாய்க்கட்டும்
நல்லதே நடக்கட்டும்.

வாழ்த்துக்கள்.

 

அன்புடன்,

அ. முகமது ஜியாவுதீன். (மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி,) முழுநேர உறுப்பினர்,

மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம்,

தமிழ்நாடு.