போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த இலங்கை ஆசாமி உள்பட மூவர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

207

சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘இலங்கை நாட்டை சேர்ந்த நிரோஷன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்பதை மறைத்து இந்திய பாஸ்போர்ட் பெற்று போலி ஆவணங்கள் மூலம் இத்தாலி நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என அந்த புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகார் மீது உடனடி நடடிக்கை எடுக்க கோரி சங்கர்ஜிவால் சென்னை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில் போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நிரோஷன் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. அதனையடுத்து அவரை 11.06.2023ம் தேதி போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணையில் இலங்கை நாட்டை சேர்ந்த நிரோஷன் என்பவருக்கு போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் மற்றும் இத்தாலி விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னை மண்ணடி, லிங்கிச் செட்டி தெருவைச் சேர்ந்த சபீக் அகமது (32) என்பவர் ரூ. 3.50 லட்சம் பெற்று இத்தாலி செல்வதற்கான போலி விசா ஏற்பாடு செய்து கொடுத்தது தெரியவந்தது. அதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியில் அவர் பணம் பெற்றுக் கொண்டு, நடராஜ் என்பவர் மூலம் பாஸ்போர்ட், விசா ஏற்பாடு செய்த விபரம் தெரியவந்தது. அவரிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் உள்தாள்கள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த நடராஜ் (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

நடராஜும், சபீக்கும் சேர்ந்து முறையாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற தகுதியற்ற நபர்களுக்கு தேவையான ஆவணங்களை போலியாக தயார் செய்து அதன் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை பணத்திற்காக ஏற்பாடு செய்து கொடுத்து வந்துள்ளார்கள். இவரிடமிருந்து இலங்கை நாட்டவரின் இந்திய கடவுச்சீட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்படி நடராஜ் மற்றும் சபிக் அகமது ஆகியோர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சபிக் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். பிணையில் வெளியே வந்தவர் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களை ஈடுபட்டுள்ளார்.

ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தபட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும், வெளிநாட்டவர் தங்கள் நாட்டினத்தை மறைத்து இந்திய கடவுச்சீட்டு பெற்றால் அவர்கள் மீதும், அதற்கு உடைந்தையாக இருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர்ஜிவால் எச்சரித்துள்ளார். போலி பாஸ்போர்ட் ஆசாமிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.