சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை, நகரில் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின் போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு
கடந்த 2019ம் ஆண்டு ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ரிக்கார் அலி (எ) நாசர் அலி (36) என்பவர் கடந்த 08.12.2019 அன்று ராயப்பேட்டை பகுதியில் தனது நண்பரான அலிசேர் (39) என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அலிசேர், ரிக்கார் அலி (எ) நாசர் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இது குறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அலிசேர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த அல்லிக்குளம் 20வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் (தற்போது வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர்) மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் சக்திகுமார் ஆகியோர் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தும் வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 24.04.2023 அன்று மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அலிசேர்க்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000- அபராதம் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

* வடக்கு கடற்கரையில் 70 வயது முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பெண் எஸ்ஐ
வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் அருணா என்பவர் கடந்த 04.05.2023 அன்று பிரோட்வே சிக்னல் அருகே பணியிலிருந்த போது, அங்கு சுயநினைவின்றி மயங்கி கிடந்த 70 வயது முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். அவரை நேரில் அழைத்து கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.
* இரவு ரோந்து பணியின் போது டூ வீலர் திருடர்களை கை செய்த காவலர்கள்
விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ், முதல் நிலைக்காவலர் சுரேஷ், காவலர்கள் வீரமணி, குணசேகரன், பாக்யராஜ் ஆகியோர் கடந்த 04.5.2023 அன்று அதிகாலை வளசரவாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியிலிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 நபர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பினார். மற்றொருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர் இளஞ்சிறார் என்பதும், அவர் அளித்த தகவலின் பேரில் மற்றொரு குற்றாளியான கஜேந்திரன், 19, என்பரையும் அன்றைய தினமே கைது செய்தனர். இருவரும் சேர்ந்து மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பது தெரியவந்ததின் பேரில் இருவரும் ஆவடி காவல் ஆணையரகம் மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
வாகன ஓட்டிகளிடம் ரூ. 10 லட்சம் அபராதம் வசூலித்த காவல் குழுவினருக்கு பாராட்டு
நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமைக்காவலர்கள் பாலமுருகன், சந்தோஷ்குமார், முதல் நிலைக் காவலர் கார்த்திகை செல்வன், ராமராஜன் ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 103 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் வசூலித்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
புழல் காவல்துறையினருக்கு பாராட்டு
புழல் காவல் நிலைய காவலர் ஆசிர்வாதம், ராஜசேகர் ஆகியோர் கடந்த 05.05.2023 அன்று அதிகாலை புழல் பகுதியில் Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் கணும் FRS செயலி மூலம் ராஜேஷ் (எ) டோரா ராஜா, நிதிஷ் ஆகிய 2 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு இருவரை கைது செய்து M-3 புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (08.05.2023) நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.