10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி: டிஜிபி அமரேஷ் புஜாரி

183

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 98.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பொதுத்தேர்வு ஏப்.6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்.15-ல் தொடங்கி மே 4-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தமிழக சிறைகளில் கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். அந்த வகையில் இந்தக் கல்வி ஆண்டில் 98 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர். அது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளதாவது, ‘‘2022 – -2023ம் கல்வி ஆண்டில், வெவ்வேறு சிறைகளை சேர்ந்த 9 பெண் சிறைவாசிகள் உட்பட மொத்தம் 203 சிறைவாசிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கோரிக்கையின் படி, மாநில பள்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டது. அவர்களில், 9 பெண் சிறைவாசிகள் உட்பட 200 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைகளிலிருந்து, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில், 98.52 சதவீதம் சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்’’.

இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி கூறுகையில், ‘சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் வாழ்வாதார பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டச் சிறை (ம) பார்ஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன.