சென்னை, மைலாப்பூர், பல்லக்குமாநகர், 10வது பிளாக், எண்.7 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜா (எ) டொக்கான்ராஜா, வ/40, கடந்த 09.07.2023 அன்று இரவு பல்லக்குமாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 நபர்கள் கொண்ட கும்பல் மேற்படி ராஜா (எ) டொக்கான்ராஜா என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ராஜா (எ) டொக்கான்ராஜாவின் சகோதரி ராணி, 42 மைலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மைலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணகிநகரைச் சேர்ந்த நரேஷ்குமார், 23, ஆவடி சபரிநாத், 24, வேப்பம்பட்டு ராஜேஷ், 20, திருநின்றவூர் மனோஜ்குமார், 21, அஸ்வின், 25, மயிலாப்பூர் கார்த்திகேயன், 25, வடபழனி ரோகித், 22, சென்னை ஆகிய 7 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கத்திகள், 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட நரேஷ்குமாரின் தந்தை கதிரவன் என்பவர் கடந்த 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கதிரவனின் மகன் நரேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜா (எ) டொக்கான் ராஜா என்பவரை கொலை செய்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் 7 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று (12.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.