கோல்டன் ஹவரில் காப்பாற்றப்பட்ட 6,084 உயிர்கள்: தமிழகத்தில் விபத்துக்கள் குறைந்தது குறித்த டிஜிபி சங்கர்ஜிவால் அறிக்கை
தமிழகத்தில் காவல்துறையினரின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் சாலை விபத்துக்கள் குறைந்தது மட்டுமின்றி உயிரிழப்புக்களும் கணிசமாகன அளவு குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிஜிபி அலுவலக செய்திக்குறிப்பு விவரம்:
தமிழ்நாடு காவல்துறை ஜனவரி முதல் ஜூலை 2025 வரை மாநிலம் முழுவதும் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. திட்டமிட்ட செயல்திட்டங்கள், இடைவிடாத முயற்சிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம், பாதுகாப்பான சாலைகள் மற்றும் போக்குவரத்து, சாலை உயிரிழப்பு விபத்துகளை குறைப்பது என்ற எங்கள் இலக்கை நோக்கி முக்கியமான முயற்சிகளை எடுத்துள்ளோம். இந்த முயற்சிகளின் வாயிலாக தமிழ்நாட்டின் சாலைகளில் ஒவ்வொரு உயிரையும் காப்பதற்கான எங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூலை வரை சாலை உயிரிழப்பு விபத்து வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 8.8 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் கட்டுபடுத்தப்பட்டுள்ளன.

24 மணிநேரமும் நெடுஞ்சாலை ரோந்து, இலக்கு நிர்ணயக்கப்பட்ட சாலை பொறியியல் மேம்பாடுகள், மேம்படுத்தப்பட்ட யூ -டர்ன் வசதிகள், போக்குவரத்து குறியீடுகளை திட்டமிட்ட இடங்களில் அமைத்தல், பொதுமக்களிடையே விரிவான விழிப்புணர்வு பிரசாரங்கள் ஆகிய நடவடிக்கைகள் விபத்து குறைந்ததற்கான காரணிகளாகும்.
மேம்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கை, தொழில்நுட்ப ஆதரவு, அதிகாரிகள் மற்றும் துணை ஊஊழியர்களின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகள் காரணமாக மொத்தம் 1,027 உயிர்கள் காப்பாற்றப் பட்டன. மேலும் 948 சாலை உயிரிழப்பு விபத்துகள் தவிர்க்கப் பட்டுள்ளன.

2024 ஜனவரி முதல் ஜுலை வரை சாலை விபத்து உயிரிழப்பு வழக்குகள் 10,792 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,268 ஆக பதிவானது. அதுவே இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜுலை வரை 9,844 வழக்குகளாகவும், உயிரிழப்பு 10,241 ஆகவும் குறைந்துள்ளது.
மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1,44,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவப்பு விளக்கு சமிக்கைகளை மீறியதற்காக 1,50,970 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியதாக 2,40,285 வழக்குகளும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 1,41,883 வழக்குகளும், அதிக பளு ஏற்றிய சரக்கு வாகனங்கள் 4550, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் தொடர்பாக 78,876 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன,
தலைக் கவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டியதாக 36,39,007 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 32,0208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சாலை விதிகளை மீறிய நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சாலைகளில் விதிகளை கடைபிடிப்பது அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு, மீண்டும் விதிமீறுவோருக்கு தடையாகவும் செயல்படுகிறது.