சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19.07.2023 ம் தேதி இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணை 4 பேர் கும்பல் அரிவாளால் சரமாரி வெட்டினர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதியாகி சிகிச்சை பெற்ற அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சென்னை ஆதம்பாக்கம், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (30) என்பது தெரியவந்தது. ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் பொன்ராம், ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் வைரவன், உதவி ஆய்வாளர்கள் அரிதாஸ், சிவகுரு, மணிகண்டன் மற்றும் காவலர்கள் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் சென்னை மாநகர் மற்றும் பக்கத்து மாவட்டங்களிலும் தொடந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதனையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சக்தி @ சக்திவேல் (வயது -23), புழுதிவாக்கம் ஜெகதீஸ் (வயது -23), சூரியா (-19), பல்லாவரம் ஜான்சன் (19)
திருநின்றவூர் நாகவள்ளி (-23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஐந்து பேரும் புறநகர் ரயில் நிலையங்களில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்து வந்ததும், தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக கைதான சக்திவேலுவும், ஜெகதீசும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. கைதான ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.