கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயன்ற 44 கிலோ கஞ்சா சிக்கியது: வடமாநில ஆசாமிகள் உள்பட 5 பேர் கைது * தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

151

ஆந்திராவில் கடத்தி வந்து சென்னைக்குள் கஞ்சா விற்க முயன்ற வடமாநில வாலிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்த தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் கோட்பாட்டின் கீழ் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் போதைப்பொருட்களை அறவே ஒழிக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் வெளிமாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களில் தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலர் கஞ்சா வாங்கி வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்த பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அதனையடுத்து கடந்த 10ம் தேதியன்று தாம்பரம் அருகே உள்ள கவுரிவாக்கம் பஸ் ஸ்டாண்டு அருகே 12 கிலோ கஞ்சாவுடன் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஆலங்கீர் உசேன் (வயது 28), சுனில்தாஸ் (23) ஆகிய இருவரை கைது செய்தனர். அதனையடுத்து மேற்கு தாம்பரம் சுடுகாடு அருகே 22 கிலோ கஞ்சாவுடன் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யுவராஜ் (30) போலீசாரிடம் பிடிபட்டார்.

மேலும் 11ம் தேதி விஜிஎன் ஐஸ்வர்யா குடியிருப்பில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தருண் சாகா (45), ஒடிசாவைச் சேர்ந்த நரேந்திர நாயக் ஆகிய இருவரையும் 10 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ரூ. 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 44 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்குப் பின்னர் ஆலங்கீர் உசேன் உள்ளிட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் நால்வரும், ஆந்திர மாநிலம், அனந்தபல்லி மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து தாம்பரம், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கூலித் தொழிலாளிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.