சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா மற்றும் காற்றாடி மீதான ஒரு நாள் சிறப்பு சோதனையில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 நபர்களை கைது செய்த போலீசார் 6 காற்றாடிகள், 2 மாஞ்சா நூல் மற்றும் 2 லொட்டாய்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை விற்பவர்கள் மற்றும் பறக்க விடுபவர்களை கண்காணித்து கைது செய்ய ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (19.05.2023) காற்றாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.
இச்சிறப்பு தணிக்கையில், சென்னை பெருநகரில், காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்தது தொடர்பாக, P-6 கொடுங்கையூர் காவல் நிலைய எல்லையில், கிருஷ்ணமூர்த்தி, வ/40, த/பெ.சுப்ரமணி, கொடுங்கையூர். R-9 வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில் கருணாநிதி, வ/51, த/பெ.விஸ்வநாதன், ஆழ்வார் திருநகர், R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் கனகராஜ், வ/23, த/பெ. குஞ்சு கவுண்டர், விருகம்பாக்கம் மற்றும் R-7 கே.கே.நகர் காவல் எல்லையில் ஷியாம், வ/20, த/பெ.ரமேஷ், அசோக்நகர் ஆகியோர் பிடிபட்டனர். இது தொடர்பாக மேற்படி காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 6 காற்றாடிகள், 2 மாஞ்சா நூல் மற்றும் 2 லொட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி எதிரிகளில் சிலர் ஆன்லைன் மூலம் காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி, சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பவர்கள் மற்றும் பறக்க விடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.