மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி: 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

185

மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ளது எக்கியார் குப்பம். மீனவ கிராமமான இந்தப் பகுதியை ஒட்டிய ‘வம்பாமேடு’ எனும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருக்கிறது. டாஸ்மாக் மதுவை விட கள்ளச்சாராயத்தின் விலை குறைவு என்பதால் இப்பகுதியைச் சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர். மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் (வயது 25) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளார். நேற்று மாலை இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியார் குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் குடித்துள்ளனர். இவர்கள் குடித்துவிட்டு தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சங்கர் (வயது 55), தரணி வேல் (வயது 50), சுரேஷ் (வயது 60), மண்ணாங்கட்டி (வயது 47), சந்திரன் (வயது 61) உள்பட 10க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளனர். சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அவர்களது உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சங்கர், சுரேஷ், தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 8 பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்ரீ நாதா, குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் பிரபல கள்ள சாராய வியாபாரி அமரன் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எக்கியார் குப்பம் மீனவர் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு வீட்டில் இருந்தவர்களை கண்டுபிடித்து சிகிச்சைக்காக மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரியை கைது செய்யக் கோரியும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்ககோரியும் கிராம மக்கள் மரக்காணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் நின்றன. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:

கள்ளச்சாராயம் குடித்ததினால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துவிட்டனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய விற்பனை போலீஸாரின் ஆதரவோடுதான் நடந்திருக்கிறது. இதுபோல் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, கள்ளச்சாராயத்தைக் குடித்துவிட்டு சுப்புராயன் என்பவர் உயிரிழந்துவிட்டார். எனவே, தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து இ.சி.ஆர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இந்த நிலையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவின்பேரில் மரக்காணம் போலீசார் விரைந்து சென்று கள்ளச்சாராய வியாபாரி அமரனை கைது செய்தனர். மேலும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் 10-க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மரக்காணம் அருகே தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.