பிடியாணைகளில் 23 பேர் கைது: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை

137

சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில், 23 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நேற்று (22.07.2023) சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் (HS Rowdy elements) மற்றும் வெட்டுக்காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை (DARE) மேற்கொள்ளப்பட்டது. சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (HS Rowdies) எதிரான சோதனையில் 726 குற்றவாளிகள் நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே, 639 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய (22.07.2023) சிறப்பு சோதனையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 1 குற்றவாளியின் இருப்பிடம் அறிந்தும் (OV Traced) நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர, கடந்த 2 மாதங்களில் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளில் 23 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 23 நீதிமன்ற பிடியாணைகள் (NBW) நிறைவேற்றப்பட்டது. மேலும், நேற்று (22.07.2023) நடைபெற்ற சிறப்பு சோதனையில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 12 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.1,220/- பறிமுதல் செய்யப்பட்டது.