1999 பேட்ச் காவலர்களின் மனிதநேயம்: உயிரிழந்த சக காவலரின் குடும்பத்துக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் ரூ. 13 லட்சம் நிதி திரட்டினர்

188

நோயினால் உயிரிழந்த 1999 பேட்ச் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு அதே பேட்ச் சக காவலர்கள் மனித நேயத்துடன் ‘உதவும் உறவுகள்-99’ வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 13 லட்சம் வசூல் செய்து உதவிய நிகழ்ச்சி பாராட்ட வைத்துள்ளது.

சென்னை நகர காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்து வந்த 1999ம் பேட்ச் தலைமைக்காவலர் ரமேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதியன்று உயிரிழந்தார். அதற்கு முன்பே ரமேஷின் மனைவியும் இறந்து விட்டார். இதனால் ரமேஷின் மகன் திவ்யேஷ் தாய், தந்தையின் ஆதரவின்றி அனாதையானார். தனது சித்தியான கஸ்தூரியின் குடும்பத்தாருடன் திவ்யேஷ் சென்னை அரும்பாக்கத்தில் தங்கி, அருகிலுள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தலைமைக்காவலர் ரமேஷ் குடும்பத்திற்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் பணியாற்றும் 1999 பேட்ச் சக காவலர்கள் உதவும் ‘உறவுகள்-99’ என்ற வாட்ஸ் அப் குழு மூலம் மொத்தம் ரூ. 13,93,000- நிதி வசூலித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலும் இரக்க மனதுடன் சென்னை நகர காவல்துறை சார்பாக ரமேஷின் குடும்பத்துக்கு ரூ. 1,39,300 வழங்கி உதவினார். இந்த வகையில் மொத்தம் ரூ. 15,32,300க்கான காசோலையை மாணவன் திவ்யேஷிடம் 1999 பேட்ச் காவலர்கள் முன்னிலையில் கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கினார். மேலும் தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு வரவேண்டிய பணப்பலன்களை விரைவில் வழங்கவும், அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின்போது கூடுதல் கமிஷனர் லோகநாதன் 1999 பேட்ச் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.