ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்த 19 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

152

தமிழகத்துக்கு வெளி மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்டு வரும் கஞ்சா ஆசாமிகளை ரயில்வே போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம் மற்றும் கோயமுத்துார் ரயில்வே போலீசாரின் ஆகியோரின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை கைது செய்யவும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (14.06.2023) தேதி காலை சுமார் 5 மணியளவில் தனிப்படையினர் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை ரயில்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்டி எண். 13351 ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டியில் சோதனை செய்த போது வண்டியின் s4 coach, berth No. 73 ன் சீட்டிற்கு அடியில் இருந்த சோல்டர் பேக் மற்றும் ட்ராவல் பேக் ஆகியவற்றை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தனர். அப்போது அதற்குள் சுமார் 19 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி அதனை கொண்டு வந்த பெண் பயணியைப் பற்றி விசாரணை செய்தனர். அவர் திருச்சியைச் சேர்ந்த விமலா (55) என்பதும் விஜயவாடாவில் இருந்து ஈரோடு வரை பயணம் செய்து அவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இவர்மீது ஏற்கனவே திருச்சி மாநகர ஈபுதுார் காவல் நிலையத்தில் இரண்டு கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கஞ்சாவை சேலம் மாநகர NIB CID வசம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தியவரையும், கஞ்சாவையும் கைப்பற்றிய தனிப்படையினரை எஸ்பி பொன்ராம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் வட மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து விரைவு இரயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை, மதுபாட்டில்கள் மற்றும் இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனிப்படையினர் மூலமும் மற்றும் போதைப்பொருட்களை கண்டறியும் மோப்ப நாய்படை மூலமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.