சென்னை நகர காவல்துறை போலீஸ் மோப்பநாய் படைபிரிவில் உயர்ரக 11 துப்பறியும் நாய் குட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. புதிய வரவு குட்டி நாய்களுக்கு கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி பெயர் சூட்டினார்.

சென்னை நகர போலீஸ் மோப்பநாய் படைப்பிரிவு கமிஷனர் அருண் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கத்திலும், புனித தோமையார்மலையிலும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் 16 மோப்ப நாய்கள் உள்ளன. அதில் 11 வெடிகுண்டு கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும் மூன்று குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும், இரண்டு போதை பொருள் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களும் உள்ளன.
மேலும், புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் 4, கொலை மற்றும் கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்பநாய்கள் 3 உள்ளன. போலீஸ் துப்பறியும் மோப்பநாய் படைப் பிரிவை மேம்படுத்தும் 11 துப்பறியும் நாய்க்குட்டிகள் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அதில் Labrador இனத்தை சேர்ந்த 2 மோப்ப நாய் குட்டிகளும், Belgium Malinois இனத்தை சேர்ந்த 3 மோப்ப நாய்களும், Doberman இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் குட்டியும் என மொத்தம் 6 துப்பறியும் மோப்ப நாய் குட்டிகள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ளன.
மேலும் மூன்று Belgium Melinois இனத்தை சேர்ந்த மோப்ப நாய் குட்டிகளும் ஒரு German Shepherd இனத்தை சேர்ந்த மோப்ப நாய் குட்டி என 4 துப்பறியும் மோப்ப நாய் குட்டிகள் போதை பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்கும், Doberman இனத்தை சேர்ந்த 1 மோப்ப நாய் குட்டி குற்ற வழக்கை கண்டுபிடிக்கும் பணிக்கும் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை நகர கமிஷனர் அலுவலக தலைமையிட கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி இன்று (09.06.2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 3 மாதங்களான 11 நாய் குட்டிகளுக்கு (8 ஆண், 3 பெண்) வெற்றி, விக்ரம், நித்ரா, முகிலன், சிலம்பன், குரளி, காரி, குகன், வென்பா, தீரன், அலெக்ஸாண்டர் (Vetri, Vikram, Nithra, Mugilan,Silamban, Kurali, Kaari, Gugan, Venbha, Dheeran, Alexander) என்று பெயரிட்டு மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார். புதிய நாய் குட்டிகளுக்கு காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
சென்னை பெருநகர காவல், மோப்ப நாய் படைபிரிவினர் கடந்த 2024 முதல் இதுவரை 3,657 அதி முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அலுவல்கள், 61 குற்ற வழக்குகளில் சம்பவ இடங்களுக்கு சென்று உரிய சோதனைகள் மேற்கொண்டு புலனாய்வுக்கு உதவி புரிந்து வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்தும், 137 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் மொத்தம் 3,855 நாசவேலை தடுப்பு சோதனை நிகழ்வுகளில் சீரிய முறையில் பணிபுரிந்துள்ளன.
இன்று (09.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் ஹரிகிரன் பிரசாத் (எஸ்டேட் மற்றும் நலன்), ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.