சென்னை பெரியமேட்டில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

324

சென்னை பெரியமேட்டில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சா, மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (09.07.2023) பெரியமேடு, மூர் மார்கெட் அருகே கண்காணித்த போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீ ராகேஷ் ரஞ்சன் சாகு, 22, விக்னேஷ், 22 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நேற்று (09.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.