தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் மற்றும் சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய சட்டம், ஒழுங்கு டிஜிபியாக சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருக்கும் சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் பயிற்சி அகாடமி இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமித்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
சங்கர்ஜிவால்
1990ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர்ஜிவால் உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிஈ மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுகளின் பணிபுரிந்தவர். சங்கர்ஜிவால் இன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை வகிப்பார்.
சந்தீப்ராய் ரத்தோர்
சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியில் பிறந்தவர். 1992ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐபிஎஸ் தேர்வு பெற்றவர். திண்டுக்கல், தூத்துக்குடி எஸ்பி, மதுரை, திருச்சி டிஐஜி மற்றும் சிபிசிஐடி பிரிவுகளில் பணிபுரிந்தவர். மேலும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், என்டிஆர்எப் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் சந்தீப் ராய் ரத்தோர் பணிபுரிந்தவர். சென்னை ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக துவங்கப்பட்ட போது அதனை செம்மையாக வடிவமைத்த பெருமை சந்தீப்ராய் ரத்தோரை சாரும்.