யூடியூப் சேனலில் பெண்ணை இழிவுப்படுத்தி காணொளி வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் முக்தாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு (Social Media Investigation Wing), பெண் ஒருவரின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளது.
சென்னை மாநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் 03.06.2026 அன்று ஒரு புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், “MY INDIA 24×7” என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொளியில், அவரையும் அவரது புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளையும் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டதாக புகார் பெறப்பட்டது.
இதுகுறித்து சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்ற காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றச்சாட்டில் தொடர்புடைய திருச்சி சூர்யா (33) என்பவர் கடந்த 04.06.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியைச் சேர்ந்த முக்தார் அகமது (48) என்பவரை கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வைத்து நேற்று (09.06.2026) கைது செய்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட முக்தார் அகமது இன்று (10.06.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேலும் இவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் இதுபோன்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதால், இவர் மீது 20க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையிலான ஆபாச, இழிவான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களை வெளியிடுவது கடுமையான குற்றமாகும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.