தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யச்சென்ற இருவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து 13 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்ததில் அதில் 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 13.500 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்களில் ஒருவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரன் (63) என்றும் மற்றொருவர் சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பாலராமச்சந்திரன் (53) என்பதும் தெரியவந்தது. கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்திலிருந்து வாங்கிவந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும் சில்லறை விற்பனைக்கும் எடுத்துச் செல்வதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக தாம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.