சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் அப்பார்ட்மென்ட்டில் கீழ் பகுதியில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய சொல்வது வழக்கம். கடந்த 10.07.2023ம் தேதி காலை 6 மணியளவில் வழக்கம் போல தனது தாயுடன் சென்றார். அப்போது சிறுமியின் தாய் பாத்ரூம் சென்று வருவதற்காக மேலே உள்ள தன் வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது அதே அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை பார்த்து வரும் திரிசூலம், அம்மன் நகரைச் சேர்ந்த 63 வயது ராமமூர்த்தி என்பவர் ஜிம்முக்குள் நுழைந்து தனியாக சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செக்யூரிட்டியிடம் விசாரித்த போது அவர் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராக்குமதி இது தொடர்பாக விசாரணை நடத்தி ராமமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார். அதனையடுத்து அவர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.