சென்னை, பாரிமுனை பகுதியில் வாலிபரை லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கிய 3 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாக்ள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பிராட்வே, அம்பரசன் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு நபரை அடைத்து வைத்து தாக்குவதாக கிடைத்த தகவலின்பேரில், எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அந்த லாட்ஜுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு அறையில் ஸ்ரீராம் என்ற நபரை அடைத்து வைத்து 3 நபர்கள் தாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், ஸ்ரீராமை மீட்டு, அவரை அடைத்து வைத்து தாக்கிய முகமது அசரத், நவீன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் காயமடைந்த நபர் காரைக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம் (வயது 32), இவருடைய நண்பரான முகமது அர்ஷத் என்பவர் மூலம் சென்னையில் உள்ள அசார் (எ) அசாருதீனிடம் ஸ்ரீராம் கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு சென்று தங்கம் வாங்கி வந்து கொடுத்து, அதற்கான தொகையை பெற்று வந்துள்ளார். மேலும் சமீபத்தில் ஓமன் நாட்டிற்கு சென்று தங்கம் வாங்கி மும்பை விமான நிலையம் வந்தபோது, அங்கு சுங்க அதிகாரிகள் சோதனை செய்வதால், ஸ்ரீராம் தங்கத்தை அங்குள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து ராம், அசாருதீனிடம் கூறியபோது, அசார் நம்பாமல் ஸ்ரீராமை சென்னைக்கு வரவழைத்து அசாரூதின் மற்றும் 3 நபர்கள் ஸ்ரீராமின் கண்ணை கட்டி மேற்படி லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கை, கால்களை கட்டிப்போட்டு தங்கத்தை கேட்டு கை மற்றும் கட்டையால் தாக்கியதும் தெரியவந்தது. அதன்பேரில் ஸ்ரீராமை அறையில் அடைத்து வைத்து தாக்கிய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது அர்ஷத் (21), திருவள்ளூர், பனப்பாக்கம் காலனியைச் சேர்ந்த நவீன் (30), ஜெயராஜ் (40) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப்கள் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய எதிரி அசார் (எ) அசாரூதினை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (12.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.