சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (42). 27.12.2024 அன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் உறவினர் இறப்பு சடங்கிற்கு சென்றார். இரவு திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கிரில் கேட் உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 29 சவரன் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள் தலா 8 கிராம் எடை கொண்டவை மற்றும் பணம் ரூ. 1 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜனார்த்தனன் பழவந்தாங்கல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் (49) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து 29 சவரன் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள், பணம் ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது. மேலும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 1 கௌபார் (சிறிய கடப்பாரை) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் சம்பவத்தன்று எதிரி ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நங்கநல்லூர் பகுதியில் முன்னரே நோட்டமிட்டு, புகார்தாரர் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதும், இவர் மீது ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.