சர்வதேச போதை பொருள் ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணி: கூடுதல் கமிஷனர் லோகநாதன் துவங்கி வைத்தார்

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை, பூக்கடை காவல் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணியை சென்னை நகர போலீஸ் தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் (தலைமையிடம்) துவக்கி வைத்தார்.

கடந்த 11.08.2022 அன்று “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற திட்டத்தை துவக்கி வைத்து, தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க உத்தரவிட்டதன் பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பு குறித்து, காவல் துறை சார்பில் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற ஜுன் 26ம் நாள் “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை” முன்னிட்டு, கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று (24.06.2023) அதிகாலை, காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் அருகில், பூக்கடை காவல் மாவட்டம் சார்பில் போதை ஒழிப்பு பெண்கள் சைக்கிள் பேரணியை சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், இணைக்கமிஷனர் ரம்யாபாரதி (வடக்கு மண்டலம்), திஷா மிட்டல் (கிழக்கு மண்டலம்), பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஸ்ரேயா குப்தா ஆகியோருடன் ஒருங்கிணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கூடுதல் காவல் ஆணையாளர், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர் ஆகியோரும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டு பூக்கடை காவல் மாவட்டம் சென்று அதே இடத்திற்கு திரும்ப வந்தனர்.

பெண் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களது சைக்கிள்களில் பொருத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தும் வகையில், சைக்கிளில் பேரணியாக சென்றனர். இறுதியாக இப்பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment