கடந்த 5 மாதங்களில் ரூ. 7 கோடி அபராதம் வசூல் செய்து கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நகரில் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சாலைகளில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க போக்குவரத்து போலீசார் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தினமும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. அவர்களை தொலைபேசியின் மூலம் அழைத்து அபராதம் செலுத்தும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் பலர் அதனை அலட்சியப்படுத்துவதையடுத்து போக்குவரத்து போலீசார் கடந்த 6,8,10 ஆகிய 3 தேதிகளில் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தினர். இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 93 வழக்குகள் உட்பட 8,613 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ. 38,31,500- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 1,90,246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ. 7 கோடியே 96 லட்சத்து 97,130- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.