கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கிய பருவமழையானது, குமரி முனை மற்றும் கேரள கடலோர பகுதிகள் முதல் மாநிலம் முழுவருதும் பரவியது. கடந்த வாரம் முதல் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 2 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4ஆம் தேதியான இன்று இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கேரள மாநிலத்தில் மீதமுள்ள 12 மாவட்டங்களில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய 2 மாவட்டங்களை தவிர பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதன்கிழமையும் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.