கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் பொதுச்சேவையால் ஈர்க்கப்பட்ட 12 வயது பள்ளி மாணவி 200 புத்தகங்களை வாங்கி காவல்துறை சார்பாக அமைக்கப்பட்ட நூலகங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது பாராட்ட வைத்துள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அயராத காவல் பணியிலும் குழந்தைகள், மாணவர் நலன் மற்றும் பொதுச்சேவையில் தவறாமல் அக்கறை செலுத்துபவர். மாணவர்களின் நுண்ணறிவை வளர்க்கும் வகையில் அவர் பணியாற்றும் காவல் மாவட்டங்களில் நூலகங்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டுவார்.
அவர் சென்னை, மயிலாப்பூர் போலீஸ் துணைக்கமிஷனராக இருந்தபோது தனது அலுவலகத்துக்கு வெளியே தன்னை சந்திக்க வருபவர்கள் அந்த சிறிது நேரத்தையும் பயனுள்ளதாக செலவிடும் வகையில் மினி நூலகத்தை அமைத்திருந்தார். இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது. மயிலாப்பூர் துணைக்கமிஷனர் அலுவலகத்தில் இன்றும் அந்த நூலகம் தனி முத்திரை பதித்துள்ள.
தற்போது பாலகிருஷ்ணனின் இந்த மாணவர் நல சமூக பணி கோவையிலும் தொடர்கிறது. கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெரு நூலகங்கள் என்ற பெயரில் லைப்ரரிகள் அமைத்துள்ளார். குறிப்பாக சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் இருக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக அவர்கள் விரும்பக்கூடிய கதை மற்றும் காமிக்ஸ் போன்ற நன்னெறியைப் புகட்டும் புத்தகங்கள் என அவர்கள் விருப்பப்பட்டு படிக்கக்கூடிய புத்தகங்கள் கொண்டு நூலகங்களை பாலகிருஷ்ணன் அமைத்துள்ளார்.
இந்த விஷயம் கோவை மாநகரில் பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவி அகர்ஷானா ஹைதராபாத்தில் படித்து வருகிறார். விடுமுறைக்கு கோவைக்கு வந்த இடத்தில் கோவை மாநகர காவல்துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களைப் பார்த்து வியந்துள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை தனது தந்தை சதீஷுடன் சென்று நேரில் சந்தித்து 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவை தெரு ஓர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இந்த ஆர்வம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘மாணவி அகர்ஷானா ஏற்கனவே புத்தகங்களை வீடு வீடாகப் போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். இது உண்மையிலேயே பிரமிப்பான விஷயம். புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் அகர்ஷானா. கோவை மாநகர காவல் அலுவலகத்திற்கு வந்து 200 புத்தகத்தை அவர் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்’’. என்றார்.