வெளிநாட்டு ஓட்டல்களில் பாலியல் தொழிலுக்கு பெண்களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்களை சென்னை விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களை விபச்சாரத்தில் தள்ளி புரோக்கர்கள் பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களை மாறுவேடத்தில் கண்டறிந்து கைது செய்ய சென்னை நகர விபசாரத்தடுப்பிரிவில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் உதவிக்கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினரின் விசாணையில் அதிர்ச்சித் தகவல்கள் வௌியாகின.
சென்னை நகரில் வேலை தேடும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் அவர்களை விபச்சாரத்தில் தள்ளி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது தெரியவந்தது. துண்டு பிரசுரங்கள் மூலம் துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஓட்டல்களில் கைநிறைய சம்பளத்தில் வேலை இருப்பதாக இந்த கும்பல் விளம்பரப்படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் பெண்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவதும் தெரியவந்தது.
அதனையடுத்து தனிப்படை போலீசார் விபசார புரோக்கர்கள் மடிப்பாக்கம் பிரகாஷ்ராஜ் (24), தென்காசி ஜெயகுமார் (40), துரைப்பாக்கம் ஆபியா (24) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், வெளிநாட்டு வேலைக்கான விளம்பர துண்டுப் பிரசுரங்கள், பெண்களிடமிருந்து பெறப்பட்ட கைரேகை அல்லது கையொப்பமிட்ட கடன் பத்திரங்கள் மற்றும் ஒப்பந்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (30.5.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.