மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்

சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச்சேர்ந்த (Police Boys & Girls Club) 100 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிதாக துவக்கப்பட்ட 38 சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களையும் சேர்த்து மொத்தம் 112 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் (Police Boys & Girls Club) இயங்கி வருகிறது. இந்த காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டு போட்டிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், மாலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர் மனோகர் தலைமையில் இன்று (29.04.2023) காலை 10.30 மணிக்கு காவல் சிறார் மன்றங்களின் மாணவ, மாணவிகள், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரயில் நிலையம் வரை பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அரும்பாக்கம், மதுரவாயல், பேசின் பாலம், துரைப்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த 100 மாணவ மாணவிகள், சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து சென்னை, ஏர்போர்ட் மெட்ரோ இரயில் நிலையம் வரை பயணம் செய்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

Comments (0)
Add Comment