சென்னை, குன்றத்தூரில் ரூ. 1 கோடி மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்துள்ள கோட்பாட்டின் கீழ் போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று 01.05.2023 காலை 7.45 மணியளவில் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட குன்றத்துார் காவல்நிலைய எல்லையில் திருமுடிவாக்கம் சுடுகாடு அருகில் கன்டெய்னர் வாகனங்களில் குட்கா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் மற்றும் ஈச்சேர் வாகனங்களை மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அதில் இருந்தவர்கள் இறங்கி தப்பிஓடி விட்டனர்.
போலீசார் வாகனங்களுக்குள் சோதனையிட்ட போது உள்ளே ரூ. 1 கோடி மதிப்புள்ள சுமார் 22 டன் குட்கா பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார் குன்றத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க பல்லாவரம் உதவிக்கமிஷனர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 22 டன் குட்காவை பறிமுதல் செய்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசாரை கமிஷனர் அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.