சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘சிற்பி’ திட்டத்தின் ஓராண்டு சாதனைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டங்களின் ஒன்றான ‘சிற்பி’ (-Students In Responsible Police Initiatives) திட்டம் 5,000 அரசு பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமாகும். சென்னை நகர காவல்துறை மூலம் குற்றமற்ற சிறந்த இளைய சமுதாயத்தினரை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் என 5,000 பள்ளி மாணவ, மாணவிகள், 12 காவல் துறை உதவி ஆய்வாளர்கள் செயல்பாட்டாளர்களாக உள்ளனர். ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பாடத்திட்ட புத்தகம் மற்றும் சீருடைகள் (2 எண்ணிக்கை) ஆகியவை அனைத்து சிற்பி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. சிற்பி மாணவர்களுக்கு 40 வாரம் பயிற்சி வகுப்புகள் மற்றும் 8 கல்விச் சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இப்பயிற்சியானது நல்ல முறையில் முடிக்கப்பட்டுள்ளது.
2022 – -2023 வருடத்திற்கான இத்திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தற்பொழுது ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் இந்த திட்டத்தின் ஓராண்டு சாதனை மற்றும் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஓராண்டு காலத்தில் சிற்பி மாணவர்களுக்கு கவாத்து, போக்குவரத்து விதிகள், கணினி வழிக் குற்றங்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், நல்லொழுக்கம், நெகிழி ஒழிப்பு, மாசு கட்டுப்பாடு, ஒளி மற்றும் ஒலி மாசு, நாட்டுப்பற்று, போதைப் பழக்கம் தடுக்கும் முறைகள், தனிப்பட்ட சுகாதாரம், இயற்கையை பேணுதல், யோகா, மனிதநலம், தற்காப்பு, தேசப்பற்று, அரசு வேலைக்கு செல்லத் தேவையான படிப்புகள், குதிரைப்படை, மோப்ப நாய் பிரிவு, இயற்கை விவசாயம், சாதனை படைப்பது, நல்ல தொடுகை, தீய தொடுகை மற்றும் உதவி தொலைபேசி எண்கள் போன்ற வகுப்புகள் அதன் நிபுணத்துவ நிபுணர்களாலும் காவல் துறையினராலும் சிற்பி நோடல் ஆசிரியர்களாலும், கற்றுக் கொடுக்கப்பட்டது.
மேலும் சிற்பி மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் யோகா வகுப்பில் கலந்து கொண்டு திரிகோண ஆசணம் செய்ததற்கு உலக இளம் சாதனையாளர் சாதனை விருது (World Young Achievers Record), தமிழ்நாடு இளம் சாதனையாளர் சாதனை விருது (Tamil Nadu Young Achievers Record), உலக ரெக்கார்டு யூனியன் (World Record Union) ஆகிய உலக சாதனை விருதுகளை பெற்றனர்.
மேலும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 5,000 சிற்பி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவாக, சென்னை எழும்பூர் முதல் வண்டலூர் வரை சிறப்பு ரயில்களில் அழைத்துச் சென்று காவல் உயர் பயிற்சியகம் அழைத்துச் சென்று வந்ததற்கு உலக சாதனை விருது பெற்றனர். மேலும் இயற்கையை பேணும் விதமாக 5 ஆயிரம் மாணவ, மாணவிகளும் 5 லட்சம் விதைப்பந்துகள் தயார் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்ததுடன், 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அசத்தியதற்காக, Indian Records Academy மற்றும் Asian Book of Reocords ஆகியோரிடமிருந்து உலக சாதனை விருதுகளை பெற்றுள்ளனர்.
சென்னை நகர தலைமையிட இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி ‘சிற்பி’ திட்டத்தின் தாக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்து வீடியோ திரை மூலம் எடுத்துரைத்தார். அதனையடுத்து சிற்பி திட்டத்தில் பங்கேற்ற 2 மாணவர்கள் கடந்த 1 வருட சிற்பி திட்டத்தில் தாங்கள் கற்றுக் கொண்ட நல்லொழுக்கங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதனால் இம்மாணவர்களின் பெற்றோர், சிற்பி திட்டதால் தங்களது குழந்தைகள் பெற்ற நேர்மறை எண்ணங்களை கண்டு பெருமிதமடைந்து, அனைத்து மாணவ, மாணவிகளும் இதே போல சிற்பி திட்டம் மூலம் தாங்கள் கற்ற நல்லொழுக்கங்கள், கடமைகள் மற்றும் நாட்டுப்பற்று உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என வாழ்த்தினர். இறுதியாக, சிற்பி திட்ட மாணவ, மாணவியர்களின் கேள்விகளிடம் தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் கேட்டறிந்தனர்.