சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ரூ. 7 கோடி மோசடி செய்த வழக்குகளில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து 412 பவுன் நகை, ரூ. 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.
சென்னையில் உள்ள பிலிப்ஸ், ஜிபிஎஸ், எல்எல்பி தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சொக்கலிங்கம் என்பவர் எங்கள் நிறுவனத்தில் மேலாளராக ஆக வேலை செய்து வருகிறார். மேலும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் SAP என்னும் Software Tool பயன்படுத்தி வருகிறோம். இந்த SAP Tool மூலமாக தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணபரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
2021-ம் ஆண்டில் எங்கள் நிறுவனத்தில் Senior Accounting Specialist ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவர் அவருடைய SAP Account-ன் User ID யை முறைகேடாக பயன்படுத்தி ஸ்பெயின், மற்றும் பெல்ஜியம் நாடுகளிலிருந்து 22.07.2022ம் தேதியிலிருந்து 08.02.2023-ம் தேதி வரை பொய்யான பல Payment Request களை தனது கணினியில் உருவாக்கியுள்ளார். அதன் மூலம் நிறுவனத்தின் பணம் சுமார் ரூ. 5 கோடியை கையாடல் செய்து விட்டார். அதற்கு உடந்தையாக அவரது நண்பர் ராபின் கிரிஸ்டோபர் என்பவரும் கூட்டு சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் நிறுவன பணத்தை முறைகேடாக ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளிலில் உள்ள தங்களது நண்பர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி பின்னர் அங்கிருந்து தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்து பண மோசடி செய்துள்ளார்’’. என தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், ஆவண மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தலைமறைவாகினர். அவர்களது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டிலும், அவர்களது நெருங்கிய உறவினர் வீட்டிலும் நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் குற்றவாளிகள் மோசடியாக பெற்ற பணத்தில் வாங்கிய தங்க நகைகள் சுமார் 215 சவரன், ரொக்க பணம் ரூ. 7.6 லட்சம், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம், லேப்டாப், 2 செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட பரமக்குடியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ராபின் கிறிஸ்டோபர் என்பவரை கடந்த 10.07.2023 அன்று போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மறுநாள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 12.07.2023ம் தேதி தனிப்படையினர் சென்னை அண்ணாநகர் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான அகஸ்டின் சிரில் (29) என்பவரை கைது செய்தனர்.
ரூ. 2.60 கோடி கையாடல் செய்த தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் கைது
சென்னை டோல்கேட்டில் Rajesh & Brothers என்ற பெயரில் பருப்பு வர்த்தகம் செய்து வரும் ராஜேஷ் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமாக Sri Pethanantchi Periandavar Traders, E. Palanivel & Sons, Amsa Traders என மொத்தம் 4 பெயர்களில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் இயங்கி வருகிறது. அந்நிறுவனங்களுக்கு வங்கிக் கணக்கு ராயபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்களது தலைமை அலுவலகத்தில் எதிரிகள் சரண்யா, பிரதீபா, திவ்யா ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு வழக்குகளை பராமரித்து வந்ததாகவும், புகார்தாரர் தங்களுடைய over drafts Limit (OD) ஐ உயர்த்துவதற்காக வங்கியை அனுகியபோது வங்கி பரிவர்த்தனைகயில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் எதிரிகள் தந்திரமாக நிறுவனத்தின் பணத்தை NEFT மூலம் தங்களது நண்பர்களின் வங்கி கணக்கிற்கு திருப்பி விட்டும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்த பில்களில் போலியான பதிவுகளை செய்து அதன் மூலம் ரூ. 2,60,55,266- கையாடல் செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, ஆவண மோசடி பிரிவு-II-ல் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் இவ்வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரண்யா, 32, பிரதீபா, 36 ஆகியோர்களை 14.07.2023 ம் தேதி கைது செய்தனர். மேலும் எதிரிகள் மோசடியாக பெற்ற பணத்தில் வாங்கிய தங்க நகைகள் சுமார் 197 சவரன், ரொக்க பணம் ரூ. 27.50 லட்சம், 3 செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் கைப்பற்றினர். பின்னர் அன்றைய தினமே எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளில் திறமையாக பணிபுரிந்து ரொக்கம் மற்றும் பணத்தை மீட்டுக் கொடுத்த மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் மீனா, உதவி ஆணையாளர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் ரேவதி, சுமதி உட்பட 26 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.