சென்னையில், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி ஏசியன் பெயிண்டுகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர்.
சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi-யின் உதவி மேலாளர் தம்புசாமி சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முன்னணி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் பிராண்டுகளை போல போலியான பெயிண்ட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார். அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்தரவின் பேரில் ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி சாம்சன் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
சென்னை, போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கல், தண்டலம் பகுதியில் போலி ஏசியன் பெயிண்டுகள் கடைகளில் விற்கப்படுவது தெரியவந்தது. அது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, ஆரோக்கியசாமி மற்றும் சரவணன் ஆகியோர் போலி தயாரிப்புகளை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. மூவரும் விலை மலிவான போலியான பெயிண்டுகளை வாங்கி அதை முன்னணி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தின் பெயர் கொண்ட பக்கெட்டில் அடைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,73,000- மதிப்புள்ள போலி ஏசியன் பெயிண்ட் பக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர், செய்து வருகின்றனர்.
போலி ஏசியன் பெயிண்டுகளை விற்ற கும்பலை கைது செய்த தனிக்குழுவினரை தமிழக அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார். மேலும் போலி பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த தகவல்களை spiprec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ முகவரியிலோ அல்லது 044- 28511587 தொலைபேசி எண்ணிலோ தெரிவிக்குமாறு பொது மக்களை அமலாக்கப்பிரிவு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.