கிண்டியில் 18 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்: 3 வடமாநிலத்தவர் கைது

சென்னை, கிண்டி பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த 3 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் இன்று (05.05.2023) காலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் விசாரணை செய்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டு பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டுகள் வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரேந்திரகுமார் பஸ்வான் (33), குஷே பஸ்வான் (20), முகமது ஜாவித் (19) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் இன்று (05.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

Comments (0)
Add Comment