வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரும் போதைப்பொருள்களை அவ்வப்போது அதிரடியாக கண்காணித்து சோதனை நடத்தி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (norcatic control bureau) தென்பிராந்திய சிறப்புப் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் நடப்பதாக என்சிபி பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது.
அரவிந்தன், ஐபிஎஸ்.,
அதனையடுத்து அதன் தென்பிராந்திய இயக்குநர் அரவிந்தன் உத்தரவின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் தனிப்படையினர் சென்னை நகரில் உள்ள ஆந்திர எல்லைகளில் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகில் ஆந்திர பதிவெண் கொண்ட பொலிரோ வாகனத்தை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். வாகனத்தின் மேல் பகுதி, அடிப்பகுதி, இருக்கை என அனைத்திலும் ஒன்று விடாமல் ஜல்லடை போட்டுத் தேடினர். அப்போது வாகனத்துக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 கஞ்சா பார்சல்களை கைப்பற்றினர். ஒரு பார்சலுக்கு 2 கிலோ வீதம் மொத்தம் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.