சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில், திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் காவல்துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் சென்னை நகரம் முழுவதும் பொருத்தப்பட்டு கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களில் உண்மை சம்பவங்களை அறிந்து குற்றவாளிகளை கைது செய்யவும் பெரிதும் உதவுகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (24.06.2023), எழும்பூர், பாந்தியன் ரவுண்டனா மற்றும் காவல் உயரதிகாரிகள் நட்பகம் (Police Officers Mess) அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் காவல் சரகத்தில் 43 இடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எழும்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மேற்படி 129 சிசிடிவி கேமராக்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, 5 MP மற்றும் Smart Motion Detection (SMD) தரத்துடன் வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது. மேலும், கேமராக்கள் இயங்கவில்லை என்றாலோ, யாரேனும் சேதப்படுத்தினாலோ, தானியங்கி மூலம் இ-மெயில் முகவரிக்கு எச்சரிக்கை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது, இதனால் கேமராக்கள் பழுதடைந்தால் உடனே தகவல் பெற்று பழுதை சீர் செய்ய முடியும். மேலும், சிசிடிவி பதிவுகளை பதிவேற்றம் செய்ய மேற்படி கேமராக்களில் Wi-Fi இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திஷா மிட்டல், தெற்கு மண்டல இணை ஆணையாளர் சிபிச் சக்ரவர்த்தி, திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Comments (0)
Add Comment