சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.08.2023) மதியம், புழல், சைக்கிள் கடை பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு இளஞ்சிறாரிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும் விசாரணையில் மேற்படி இளஞ்சிறார் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 17 வயது இளஞ்சிறாரை பிடித்து, அவரது வீட்டில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 300 நைட்ரவிட் (Nitravet) உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் பிடிபட்ட 17 வயது இளஞ்சிறார் மீது, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக அம்பத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. பிடிபட்ட 17 வயது இளஞ்சிறார், விசாரணைக்குப்பின்னர், இன்று (09.08.2023) சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.