டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா? அதிர்ச்சியூட்டும் சைபர்கிரைம் காவல்துறையின் அலெர்ட் * உடனே விழித்துக் கொள்ளுங்கள்

‘‘டிஜிட்டல் மூலம் நாம் கைது செய்யப்படுவோமா’’ என்ற அதிர்ச்சித் தகவலுடன் சென்னை பெருநகர சைபர்கிரைம் காவல்துறை விழிப்புணர்வுடன் கூடிய அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை முழுவதும் கவனித்துப் பார்த்த போது அந்த விழிப்புணர்வின் முக்கியத்துவம் புரிந்தது. நிச்சயம் அனைத்து தரப்பினரும் அந்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வது அவசியம். இதோ நீங்களும் தெரிந் கொள்ளுங்கள்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களை குறி வைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் (FEDEX), புளுடார்ட் (BLUE DART) கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவது போல் பேசுகின்றனர். மேலும் அவர்கள் உங்களுடைய பெயரை கூறிப்பிட்டு உங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு புலித்தோல், போதை பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றம் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாகவும், அது சம்மந்தமாக மும்பை சைபர் கிரைம், சிபிஐ, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதாகவும் கூறி போன் அழைப்பை மற்றொரு நபருக்கு பார்வேர்டு செய்வார்கள்.

பின்னர் எதிர்முனையில் காவல் துறையினரைப்போன்று பேசும் நபர், ஸ்கைப் எனப்படும் சமூக வலைதள ஆப்பை நம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்யச் சொல்லி அதன் மூலம் வீடியோ காலில் நம்மை தொடர்பு கொண்டு பேசுவார்கள். நம்முடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்ட விரோதமாக பலகோடி ருபாய்க்கு பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும், மேலும் பல வங்கிகளில் கணக்கு துவக்கி முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் அவர்கள் அதிர்ச்சியூட்டுவார்கள். மேலும் உங்களுடைய சேமிப்புத் தொகை, பிக்சட் டிபாசிட் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டி அவர்கள் கொடுக்கும் ஆர்.பி.ஐ வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை உடனடியாக அனுப்பும்படியும் கூறுவார்கள்.

மேலும் அவர்களுடைய தொலைபேசி அழைப்பை கட் செய்தாலோ, அல்லது அவர்கள் பேசுவதைப் பற்றி பிற நபர்களிடம் தெரிவித்தாலோ அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து விடுவார்கள் எனவும் மிரட்டுவார்கள். கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் அவர்கள் சொல்லுவது போல் பணத்தை அனுப்பும்படியும் அந்த பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடுவதாகவும் கூறுவார்கள்.

மேலும் நாம் நம்புவதற்காக ஏற்கனவே போலியாக தயார் செய்த பத்திரிக்கைச் செய்திகள், வலைதளங்கள், புகைப்படங்களை ஸ்கைப் ஆப்பில் அனுப்பி வைப்பார்கள். அதை உண்மை என்று நம்பி பலர் தங்களுடைய வங்கி கணக்குகளில் உள்ள சேமிப்பு பணம் மற்றும் வைப்புத் தொகை பணத்தை சந்தேக நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து ஏமாற்றப் படுகின்றார்கள். மேலும் நம்முடைய தனிப்பட்ட மற்றும் வங்கி விபரங்களை வைத்து நமக்குத் தெரியாமல் நம்முடைய பெயரில் வங்கிகளில் தனி நபர் கடன் பெற்று அதன் மூலமாகவும் ஏமாற்றுகின்றனர். பணத்தை பெற்ற உடன் சந்தேக நபர்கள் ஸ்கைப் ஆப்பில் அனுப்பிய அனைத்து மெசேஜுகள் மற்றும் தடயங்களை அழித்து விடுகின்றார்கள்.

மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை போலீஸ் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுகின்றனர். இத்தகைய குற்றச் செயல்களில் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொது மக்களை ஏமாற்றி ஏமாற்றி வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிரமம் ஏற்படுவதும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக சென்னை நகர காவல் ஆணையாளர் திரு. சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள், பொது மக்கள் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றம் பிற காரியங்களை தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார தெரிவிக்கும்படியாகவும் திரு. சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Comments (0)
Add Comment