சென்னை தேனாம்பேட்டை பகுதியில் போலி கால் சென்டர் நடத்திய 2 நபர்களை பிடித்த மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல்குழுவினர் மற்றும் 4வது மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர் ஆகியோரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் (65). இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதியன்று மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி பழகியுள்ளார். 2 மாதங்களாக பழக்கத்தில் இருந்த அந்த நபர் ராமநாதன் ஏற்கனவே போட்டு வைத்திருந்த PNB Metlife Policy–யை Close செய்வதற்கு உதவுவதாக கூறியுள்ளனர். மேலும் அந்த நபர் தொடர்ந்து ராமநாதனை தொடர்பு கொண்டு 18,64.204- ரூபாயை பல்வேறு காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாலிசி தொகை ரூ.4,20,00,000 ரூபாயை Withdrawal செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ராமநாதன் அந்த நபரிடம் மொத்தமாக 17 பாலிசிகள் எடுத்துள்ளார். ஆனால் ராமநாதனுக்கு எந்த விதமான பாலிசி சம்மந்தமான ஆவணங்களோ அல்லது பணமோ திரும்ப அளிக்கப்படவில்லை. இதுகுறித்து ராமநாதன், சென்னை நகர மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான போலீசார் அது குறித்து விசாரணை நடத்தினர். இதில் ராமநாதன் பணம் போட்டிருந்த அத்தனை பாலிசிகளும் போலியானது என்பது தெரியவந்ததது. அதனையடுத்து ராமநாதனிடம் செல்போனில் பேசிய நபரின் எண்ணை வைத்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த எண் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாந்திதேவியிடம் 9445918905 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு பெண் தன்னுடைய பெயர் நந்தினி என்றும், தாம்பரம் மேற்கு, அப்போலோ மருத்துவமனை அருகில் உள்ள HDFC வங்கியிலிருந்து பேசுவதாக பேசியுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு எடுத்த பாலிசியின் முதிர்வு தொகை ரூ. 2,85,000 காலாவதியாகிவிட்டதாகவும், பின்பு தான் ஒரு லிங்கை அனுப்புவதாகவும் அதன்லிங் மூலம் ரூ.15,000 + GST தொகையை செலுத்துமாறும், பின்னர் அதே லிங்கில் ஆதார் கார்டு, பேன் கார்டு, பேங்க் பாஸ்புக் மற்றும் புகைப்படத்தையும் பகிருமாறு கூறினார். அவர் கூறியது போன்று எந்த விதமான பாலிசியும் இல்லாத காரணத்தினால், முறைப்படி அந்த தொலைபேசி எண்ணை Track செய்து பார்த்தப்போது அந்த எண் சென்னை தேனாம்பேட்டை, ரங்கூன் தெருவில் உள்ள JVL Plasa என்ற முகவரியில் இருந்து வந்தது தெரியவந்தது.
அதனையடுத்து மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது முதல் மாடியில் நிறுவன பெயர் பலகை ஏதும் இன்றி 50 ஊழியர்களுடன் முன்னீர் உசேன் என்பவர் தலைமையில் ஒரு போலி கால்சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.
ஏற்கனவே முன்னீர் உசேன் என்பவர் ஏற்கனவே 2020ஆம் ஆண்டு இதே போன்று போலி கால் சென்டர் நடத்திய குற்றத்திற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது. அதனையடுத்து மேற்கு மண்டல சைபர்கிரைம் போலீசார் இந்த வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவிற்கு கால் சென்டர் உரிமையார் முனீர் உசேன், மற்றும் மேலாளர் அசோகன் இருவரும் மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய பெண் உதவி ஆய்வாளர் மீரா:
சென்னை, திநகர் நானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் டெவினா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 23.06.2025 அன்று மாலை, அவரது வீட்டின் படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். தகவல் கிடைத்ததும் மாம்பலம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மீரா என்பவர் விரைந்து சென்றார். 4வது மாடியிலுள்ள டெவினாவிடம் செல்போனில் சாதுர்யமாக பேசிக் கொண்டே கதவை உடைத்து உள்ளே நுழைந்து, ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு குதிக்க முயன்ற டெவினாவை மீட்டார். அவரைப் பிடித்து, தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வீட்டிற்குள் இழுத்து காப்பாற்றினார்.
இந்த வகையில் சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் போலி கால் சென்டர் நடத்திய நபர்களை கைது செய்த மேற்குமண்டல சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி, சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், முதல் நிலைக்காவலர்கள் வெங்கடேசன், புண்ணியரசன், காவலர்கள் தட்சிணாமூர்த்தி, மைனர்பாண்டி மற்றும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய சவுந்திரபாண்டியனார் அங்காடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீரா ஆகியோரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று 27.06.2025நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.