அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
பக்ருதீன்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சப் டிவிஷன், உடையார்பாளையம் காவல் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யும்படி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
விஜயபாஸ்கர்
அதன்பேரில் திருச்சி டிஐஜி பகலவன், அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் கொள்ளையனை பிடிக்க ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நா. முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயங்கொண்டம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது பிரபல ரவுடி கோவில்சீமை, வீரமுத்துகாலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜயபாஸ்கர் மற்றும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பக்ருதீன் என்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் பிடிக்கச் சென்ற போது அவர்கள் இரு சக்கரவாகனத்தில் ஏறி தப்பிக்க முயன்றனர்.
அப்போது பைக் நிலைதடுமாறி அங்கிருந்த மேம்பாலத்தில் மீது இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பக்ருதீனுக்கு கால் எலும்பும், விஜயபாஸ்கருக்கு கை எலும்பும் முறிந்தன. இருவரையும் கைது செய்த போலீசார் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வழிப்பறிக் கொள்ளையர்களை கைது செய்த இன்ஸ்பெக்டர் நா. முத்துக்குமார் உள்ளிட்ட தனிப்படையினரை ஐஜி கார்த்திகேயன், டிஐஜி பகலவன், எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.