சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்தி பிரதீபன். இவருக்கு காரம்பாக்கம், அருணாச்சலம் நகரில் 1,456 சதுரடியில் நிலம் உள்ளது. அங்கு அவர் வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில், 2014ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மன் நாட்டிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். தற்போது மேற்படி வீட்டுடன் கூடிய நிலத்தை விற்பனை செய்வதற்காக தனது நண்பர் ருத்ரன் அவரது சகோதரர் நாகராஜன் ஆகியோருக்கு மேற்படி இடத்திற்கான அசல் ஆவணங்களை ஜெர்மனியிலிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் ருத்ரன் மேற்படி நிலத்தின் அசல் ஆவணங்களுடன் பிரதீபன் பெயரில் போலியான Life Certificate தயார் செய்து, ருத்ரன் தனது பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்தது போன்று பதிவு செய்து, மேற்படி நிலத்தை அவரது அண்ணன் நாகராஜன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். நாகராஜன் மேற்படி நிலத்தின் ஆவணங்களை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து, ரூ.46,60,000- பணம் பெற்று மோசடி செய்துள்ளார். மேலும் ஜெர்மனியில் உள்ள பிரதீபன் மதுரையில் உள்ள அவரது உறவினர் சரவணபகவான் என்பவருக்கு மேற்படி நிலத்தின் பொது அதிகாரம் கொடுத்து, சரவண பகவான் மேற்படி சுமார் ரூ.80 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதீபன் அளித்த புகாரின் பேரில் கமிஷனர் அருண், எதிரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, துணைக்கமிஷனர் ஆரோக்கியம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையில் நிலமோசடி புலனாய்வு பிரிவில் (LFIW) போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து நிலமோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி ருத்ரனின் தாயார் திருமதி ஹெலன் 20.05.2024 அன்று கைது செய்து, நீதிம்னறக் காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைமறைவு ருத்ரன் (34) என்பவரை 05.02.2025 அன்று கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். மேலும், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமறைவு எதிரி நாகராஜன் (37) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் எழும்பூர் சிறப்பு நீதிமன்றம், நீதிதுறை நடுவர், எழும்பூர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.