சென்னை, புளியந்தோப்பு, நரசிம்மா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 40). இவர் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 18.08.2023 அன்று மாலை சென்னை, பட்டினம்பாக்கம், லூப் சாலை, நம்பிக்கை நகர் பகுதியில் தனது நண்பர் மாது (எ) மாதவன் என்பவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஆற்காடு சுரேஷை வெட்டிக் கொலை செய்தனர். இதில் சுரேஷின் நண்பர் மாதேஷ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை கைது செய்ய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவுரையின் பேரில் இணை ஆணையாளர் திஷா மிட்டல் மற்றும் மயிலாப்பூர் துணை ஆணையாளர் ரஜத்சதுர்வேதி ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மைலாப்பூர் உதவி ஆணையாளர் மற்றும் பட்டினம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதனையடுத்து காவல் குழுவினர் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூரைச் சேர்ந்த சந்துரு (எ) சைதாப்பேட்டை சந்துரு (29), எம்ஜிஆர் நகர் யமஹா மணி (எ) மணிவண்ணன் (26), அரக்கோணம் ஜெயபால் (63), நெல்லை செந்தில்குமார், 47, முத்துக்குமார் (எ) மதன் (29), கன்னியாகுமரி எட்வின் ஜெகன், 46, நெல்லை நவீன் 22, தூத்துக்குடி இசக்கி முத்து (எ) போஸ், 24, நாங்குநேரி சொக்கலிங்கம் (எ) சுரேஷ் 24, ஆகிய 9 பேர் நபர்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் முன்விரோதம் காரணமாக மேற்படி கொலை நடந்துள்ளது தெரியவந்தது. மேற்படி எதிரிகளிடமிருந்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய 5 கத்திகள், 3 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்த ஜான் கென்னடி, 53, சுதாகர் பிரசாத், 34 ஆகிய இருவரை நேற்று (03.09.2023) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 2 நபர்களும் இன்று (04.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
கைதான ஜான் கென்னடி அதிமுக சென்னை மாவட்ட பிரதிநிதி ஆவார். இவர் முக்கிய குற்றவாளி ஜெயபாலின் தம்பி ஆவார். சுதாகர் ஆயிரம் விளக்கு 111-வது வட்ட செயலாளர் ஆவார். இவர்களும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஜெயபாலுக்கு உறுதுணையாக செயல்பட்டு உள்ளதாகவும், ஆற்காடு சுரேசை மோட்டார் சைக்கிளில் இவர்களும் பின்தொடர்ந்து வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.